சென்னையில் கோயில், மசூதி சர்ச்களை திறக்க அனுமதி..
சென்னையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பஸ், ரயில் போக்குவரத்தும் தொடங்கப்படவில்லை.
சென்னை மாநகராட்சி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சிறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதே சமயம், சென்னையில் கோயில்கள் திறக்கப்படவில்லை. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கப்பட்டன.இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 10ம் தேதி முதல் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் திறக்கலாம் என்றும், இதற்குச் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.