விமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனாவா?!.. கோழிக்கோடு விபத்தில் அடுத்த அதிர்ச்சி
துபாயில் இருந்து நேற்று இரவு கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இறங்கிய ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் ஓடுதளத்தைத் தாண்டி சென்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தின் முன் பகுதி பாகங்கள் சுக்குநூறாக உடைந்தது. 19 பேர் வரை இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். 130 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தின் காரணமாகவும், பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதாலும், விபத்துக்கு இடையிலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் விபத்தில் இறந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 39 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே விபத்தில் சிக்கி துயரத்தில் அனுபவித்து வரும் அவர்களுக்கு இந்த தகவல் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், பயணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அருகில் உள்ள கிராம மக்களும் ஈடுபட்டதால், அவர்களும் தற்போது கொரோனா அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.