செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது..

சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரை, காஞ்சிபுரம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரம் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. இதற்குத் தடுப்பு மருந்து இல்லாவிட்டாலும், இந்நோய்க்கு இறப்பு விகிதம் குறைவாக உள்ளதால் மக்கள் இந்நோயுடன் வாழப் பழகிக் கொண்டுள்ளார்கள்.நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 2வ இடத்தில் தமிழகம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.9) ஒரே நாளில் 5994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 20 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இது வரை 2 லட்சத்து 96,901 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6020 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 38,678 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 53,336 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 119 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4927 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 9117 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 397 பேருக்கும், காஞ்சிபுரம் 393, மதுரை 107, திருவள்ளூர் மாவட்டத்தில் 396 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 17,811 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 17,013 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 12,005 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 196 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 250 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கோவை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

More News >>