பெண்ணை ஆதரிக்கும் பெண் சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்..
விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததுடன் ஆரவ் நடித்திருக்கும் ராஜபீமா படத்தில் நடித்து வருபவர் ஆஷிமா நார்வால். இவர் கறுப்பு வெள்ளை புகைப்பட சவால் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் (#WomanSupportingWoman) ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து நிரப்பி வருகின்றன.
ஒரு பெண் தனது கறுப்பு வெள்ளைப் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, வேறு சில பெண்களையும் அதுபோல் வெளியிடத் தூண்டி சவால் விடுவார். ஏராளமான பெண்கள் இந்த ஹேஷ் டேக்கில் தங்கள் படங்களை வெளியிட்டு ஆதரவு தந்து வரும் நிலையில், இப்போது நடிகை ஆஷிமா நார்வால், தனது படத்தை வெளியிட்டு மனிதம், அன்பு, பரிவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு செய்தியையும் பகிர்ந்திருப்பது இணைய வாசிகளின் இதயங்களைக் கொள்ளை கொண்டு விட்டது.இது குறித்து விவரித்த ஆஷிமா நார்வால் "நேர் மறை நோக்கத்துடன் நல்ல செயல்கள் செய்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள், நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்கள் என்றிருக்கும் அனைவரையும் ஆண்-பெண் பால் பாகுபாடு பார்க்காமல் நான் ஆதரிக்கிறேன். பெண் பெண்ணுக்கு ஆதரவு காட்டுகிறாளா அல்லது ஆண் ஆணுக்கு ஆதரவு காட்டுகிறானா என்பதல்ல விஷயம்.
நல்லவர்களுக்கு நல்லவர்கள் ஆதரவு காட்ட வேண்டும் என்பதே முக்கியம். பல ஆண்கள் எனக்கு ஆதரவு காட்டியதால் தான் ஆசீர்வாதமான வாழ்க்கை எனக்கு அமைந்தது. ஆணோ அல்லது பெண்ணோ அது முக்கியமல்ல. எந்த பாலினத்தவர் என்றாலும், அவரது நோக்கம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண் பெண் அனைவருக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படத்தைச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்" என்றார் ஆஷிமா நார்வால்.