கொரோனா இருந்தாலும் வேலை.. சம்பளம் கட்.. இது `ஐபேக் அட்ராசிட்டி!

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவை, வருகிற தேர்தலில் ஆட்சி கட்டிலில் ஏற்றிட வேண்டிய கட்டாயத்தில் சரணாகதி அடைந்திருக்கும் இடம், இந்தியாவின்பிரபல வித்தகர் பிரசாந்த் கிஷோர். இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் தனது வியூகத்தால் ஆட்சி மாற்றியமைத்த இந்த பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் கடந்த ஜனவரியில் கைகோத்தது.

இந்தக் கூட்டணியின் ஆரம்பமே சலசலப்புடன்தான். இருந்தாலும் அதனை திமுக தலைமை சமாளித்துவிட வியூக பணிகளை கச்சித்தமாக செய்யத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே உள்ளதால், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனொரு பகுதியாக தேர்தல் வேலை செய்வதாக சமீபத்தில் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தது ஐபேக்.

கொரோனா வைரஸ் பரவல் சமயத்திலும் இந்த ஆள் எடுக்கும் படலம் நடந்தது. இப்படி வேலைக்கு எடுத்துவர்களுக்கு சம்பளம் கொடுக்காத சர்ச்சையில் சிக்கியுள்ளது ஐபேக். இதுதொடர்பாக ஐபேக்கின் பெயர் வெளியிட விரும்பாத ஊழியரிடம் விசாரிக்கும்போது, ``மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்தல் பணியாற்ற நாங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டோம். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. முதல் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள ஐபேக் தலைமையைத் தொடர்புகொண்ட போது, எங்களை சென்னை அலுவலகத்துக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ள சொல்கிறார்கள். இங்கே தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. ஐபேக் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாக ஆபீஸில் இருந்த மற்ற 37 பேருக்கும் சோதனை நடந்துள்ளது.

IPAC Mail

இதில் மூன்று பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி. இதையடுத்து நால்வரும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையிலும் அலுவலகத்துக்கு நாங்கள் வந்தே ஆக வேண்டும் எனக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது ஆபீஸுக்கு செல்லலாம் என இ பாஸுக்கு விண்ணப்பித்தால் அதுவும் கிடைக்கவில்லை. இதை அலுவலகத்தில் சொன்னால், எப்படியாவது வாருங்கள், விதிகளை மீறியாவது வாருங்கள் என கட்டாயப்படுத்தப்படுகிறோம். நாங்கள் எல்லாம் திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற ஊர்களிலிருந்து எப்படி விதியை மீறி அவ்வளவு தூரம் வர முடியும். நாங்கள் எங்காவது மாட்டிக்கொண்டால் என்ன செய்வது" என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஐபேக் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும் தகவல் இருக்கின்றன. அதேவேளையில், கொரோனா சோதனை எடுத்திருந்தாலும், அறிகுறிகள் இருந்தாலும் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற தொனியில் அந்த மெயிலில் தகவல்கள் உள்ளன.

கொரோனா பரவலால் பல தனியார் கம்பெனி ஊழியர்கள் வேலை இழந்ததை சுட்டிக்காட்டி, சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசை கடுமையாக சாடியதோடு அரசு அவர்களுக்கு மாதம் ரூ.5,000 தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதே ஸ்டாலினின் கட்சிக்காக உழைக்கும் தனியார் நிறுவனம் தற்போது ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தற்போது கூடுதல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பு: இச்செய்தி தொடர்பாக ஐபேக் அவர்களது சார்பு கருத்தை தெரிவிக்க நினைத்தால், அதையும் வெளியிட தயாரக உள்ளோம்.

More News >>