தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தாண்டியது.. பலி 5 ஆயிரமானது..
தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இந்நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலக நாடுகளில் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்கா, பிரேசிலில் பரவியிருக்கிறது. அதே சமயம், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில்தான் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 2வ இடத்தில் தமிழகம் நீடிக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.10) ஒரே நாளில் 5914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 35 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று நோய்ப் பாதிப்பு அறியப்பட்டவர்களையும் சேர்த்தால், தமிழகத்தில் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 3 லட்சத்து 2815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய 6037 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 44,675 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 114 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. இது வரை 5041 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று 976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 10,121 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 483 பேருக்கும், காஞ்சிபுரம் 310, மதுரை 100, திருவள்ளூர் மாவட்டத்தில் 399 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 18,332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 17,340 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 12,104 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 189 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 195 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.