ஜனநாயகத்தை காப்பாற்றுவேன்.. பல்டி அடித்த பைலட்..

ராஜஸ்தானில் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், ஆட்சியைக் கவிழ்க்க முடியாமல் பல்டி அடித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று பிரியங்கா காந்தியை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மாண்புகளைக் காப்பாற்றுவேன் என்று பேட்டியளித்துள்ளார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்கக் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அது நடக்காததால், அதிருப்தி தலைவராக மாறினார். பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது.

இதையடுத்து, பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட்டுக்கு எதிராகத் திரும்பினார். ஆனாலும், முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் கெலாட்டுக்கு மெஜாரிட்டி இருக்கிறது. சட்டசபையைக் கூட்டி தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டால், அதற்குப் பிறகு 6 மாதங்களுக்கு மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோர முடியாது என்று கெலாட் முடிவெடுத்தார். சட்டசபையைக் கூட்டுவதற்குச் சபாநாயகர் ஜோஷி முடிவு செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அரசு தரப்பில் மூன்று முறை கடிதம் எழுதியும் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதற்கு அனுமதி தர மறுத்து வந்தார். கடைசியாக, முதல்வர் கெலாட்டின் கோரிக்கையை ஏற்று ஆக.14ம் தேதியன்று சட்டசபையைக் கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வளைக்க சச்சின் பைலட் மற்றும் அவருக்குப் பின்னணியிலிருந்த பாஜகவினர் தீவிரமாக முயற்சித்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், பைலட்டை பாஜகவினர் கைவிட்டு விட்டனர்.இந்த சூழலில், சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் நேற்று(ஆக.10) மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அதன்பிறகு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியையும் சந்தித்துப் பேசினர். பின்னர், சச்சின் பைலட் கூறுகையில், எங்கள் கருத்துக்களை சோனியா காந்தி கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத்தான் காங்கிரஸ் ஆட்சி வந்தது. எங்கள் குறைகளைத் தீர்க்க 3 பேர் கமிட்டி அமைப்பதாகச் சோனியா காந்தி கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மக்களின் நல்வாழ்வுக்காகவும், ஜனநாயக மாண்புகளைக் காப்பாற்றவும் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

More News >>