ரஜினியின் பாடல் படமாக்க சீசன் முடிந்ததால் அதிர்ச்சியான இயக்குனர்.. பொதுவாக என் மனசு தங்கத்திற்காக.. நடந்த பரபரப்பு..
ரஜினியின் 45 வருட திரையுலக கொண்டாட்டம் நேற்று முதலே தொடங்கி விட்டது. மோகன்லால், ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், சுனில் ஷெட்டி, லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட பலரும் ரஜினியின் முன்னோட்ட டிபி வெளியிட்டனர். அதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு நன்றி தெரிவித்த ரஜினி, நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ் டேக் வெளியிட்டார். அது டிரெண்டிங் ஆனது.ரஜினிகாந்த் படம் இயக்கிய இயக்குனர்கள் அவரது படப்பிடிப்பு அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். ரஜினி நடித்த பல படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்க 1980ம் ஆண்டு முரட்டுக் காளை படம் உருவானது. அப்படம் பற்றிய அனுபவத்தைக் கூறினார்.
அவர் கூறியதாவது: முரட்டுக்காளை படத்தின் ஸ்கிரிப்ட்டை ரஜினியிடம் சொன்னபோது அவர் அதை மிக ஆர்வமாகக் கேட்டார்.அதில் மஞ்சு விரட்டு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதைக் கேட்டவர் பரவசம் ஆனார். இத்துடன் பொதுவாக என் மனசு தங்கம் பாடலும் படமாக்க ஸ்கிரிப்ட்டில் எழுதி இருந்தோம். அதைப் படமாக்க முடிவு செய்து ஆலோசித்தபோது பொங்கலை யொட்டி மஞ்சு விரட்டு நடக்கும் என்ற நிலையில் அப்பாடலைப் படம்பிடிக்க எண்ணியபோது எல்லா ஊர்களிலும் அது நடந்து முடிந்திருந்தது. இது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் காரைக்குடி அருகே பாகனேரியில் இதற்கான படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்பகுதியில் கோவில், பசுமையான வயல்வெளி என எதுவெல்லாம் காட்சிக்குத் தேவையோ அதுவெல்லாம் அங்கு இருந்தது. ரஜினியிடம் காட்சியை விளக்கினேன். மஞ்சு விரட்டு போட்டியில் த்ரில் வெற்றி பெறுகிறீர்கள் அந்த சந்தோஷத்துடன் பொதுவாக என் மனசு தங்கம் பாடல் பாடுகிறீர்கள் என்றதும் அவர் அந்த சீனுக்கு தயாராகி விட்டார். புலியூர் சரோஜா நடன காட்சி அமைத்தார். ஒரு சில ஸ்டைல்களை இப்படிச் செய்யலாமா என்று கேட்டு ரஜினி நடிப்பார். அந்த பாடல் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக மாறிவிட்டது. இப்பாடலுக்கு இளையராஜா இசை அமைத்தார். பஞ்சு அருணாச்சலம் பாடல் எழுதினார், மலேசியா வாசு தேவன் பாடலை பாடினார்.
இவ்வாறு எஸ்.பி.முத்து ராமன் கூறினார்.