தமிழகத்திற்கு தேவை ரூ.9000 கோடி சிறப்பு நிதி.. முதலமைச்சர் வேண்டுகோள்..
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவற்றைத் தொடர்ந்து தற்போது ஆந்திரா, கர்நாடகம், டெல்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.
இதையடுத்து, இந்த 10 மாநிலங்களில் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய பிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை, நிவாரண நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் கூறுகையில், பேரிடர் நிவாரண நிதியில் 35 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குத் தருவது போதவில்லை, அதை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்று கோரினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்திற்கு சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ் ரூ.712.64 கோடி ஒதுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ரூ.512.64 கோடி மட்டுமே வந்துள்ளது. தற்போது தமிழக அரசில் உள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.