அமெரிக்க ஸ்காலர்ஷிப் புல்லட்டில் வந்த இருவர்!- ஈவ் டீசிங்கால் உயிரைப் பறிகொடுத்தாரா உ.பி பெண்?!
உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா. 20 வயதான இவர், 12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 98 சதவிகித மதிப்பெண் எடுத்தவர். இதையடுத்து அமெரிக்காவில் சென்று கல்லூரி படிப்பு படிக்க, இவருக்கு அரசின் ஸ்காலர்ஷிப்பாக ரூ.3.80 கோடி கிடைத்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே, கொரோனா பரவலை அடுத்து ஜூன் மாதத்தில் சொந்த ஊர் திரும்பிய சுதீக்ஷா, வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான், நேற்று தனது உறவினர் உடன், சொந்த ஊரில் இருந்து அருகில் உள்ள கவுதம் புத்தா நகருக்கு பைக்கில் சென்றிருக்கிறார் சுதீக்ஷா. அப்போது தான் அந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ``சுதீக்ஷாசென்ற பைக்கை புல்லட்டில் வந்த இருவர் பாலோ செய்தனர். சுதீக்ஷாவை கமெண்ட் அடித்துக்கொண்டே அவர்கள் பாலோ செய்தனர்.
புலந்த்ஷாஹர் நகரைக் கடந்தபோது, ஒரு கிராமத்திற்குள் நுழைந்தோம். அங்கு புல்லட் பைக் பல முறை எங்களை முந்தியது; இருவரும் பொறுப்பற்ற முறையில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார். ரோட்டிலேயே ஸ்டண்ட் செய்யத் தொடங்கினார். நாங்கள் பைக்கின் பிரேக்கை அழுத்த, பின்னால் வந்த வண்டி எங்கள் மோதியது. நாங்கள் இருவரும் விழுந்தோம். சுதீக்ஷாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே சுதீக்ஷா உயிரிழந்தார். அந்த புல்லட்டில் வந்த இருவரை எங்களால் அடையாளம் காண முடியவில்லை, நாங்கள் விபத்தைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து தப்பினர்" என்கிறார் அவருடன் சென்ற உறவினர்.
சுதீக்ஷா உயிரிழப்பு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதீக்ஷாவை ஈவ் டீசிங் செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சுதீக்ஷாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் மாயாவதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, இந்த விஷயத்தில் போலீஸ் சொல்வதோ, ``விபத்து நடந்தபோது ஈவ் டீசிங் செய்தார்கள் என்பதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை. சுதீக்ஷா சென்ற பைக்கை ஓட்டியது அவரது மாமா கிடையாது. அவரின் சகோதரன்தான். அவரின் சகோதரன் ஒரு மைனர். சுதீக்ஷா ஹெல்மெட் அணியாததால்தான் உயிர்விட நேர்ந்துள்ளது" எனக் கூறியுள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் தற்போது கூடுதல் சர்ச்சை எழுந்துள்ளது.