கொரோனாவுக்கு எதிரான விடியல்.. வாக்சின் மருந்தை பதிவு செய்த ரஷ்யா!
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், மூன்று கட்ட சோதனைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே, ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறியுள்ளார். தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ கான்பரென்சிங் மூலம் பேசிய புதின், ``உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக என்னுடைய மகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்காக முன்பே ரஷ்யா பெரிய அளவில் முயற்சிகளைச் செய்துவந்தது. அதன்படி, சில வாரங்களில் உற்பத்தி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு வாக்கில் பல லட்சம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த மாத ஆரம்பத்திலேயே ரஷ்யா தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது மருந்தைப் பதிவு செய்த முதல் நாடக ரஷ்யா இருக்கிறது. இந்த வாக்சினைத் தயாரித்தது மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம். ரஷ்யாவை அடுத்து இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் கொரோனாவுக்கு எதிரான விடியல் விரைவில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.