காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினரின் பேஸ்புக் பதிவால் வெடித்த வன்முறை.. 2 பேர் சாவு, 110 பேர் கைது
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவால், எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு(ஆக.11) வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். கர்நாடகாவில் புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது உறவினர் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். இது சிறுபான்மை இனத்தவரை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு வன்முறை வெடித்தது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசினர். கலவரம் குறித்து தகவலறிந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். எனினும், கலவரக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.இந்த கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கூடுதல் கமிஷனர் உள்பட 60 போலீசார் மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர். கலவரம் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுகையில், வன்முறையில் ஈடுபட்ட 110 பேரை கைது செய்திருக்கிறோம். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதிவு போட்ட நவீன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் இது போன்று பதிவுகளை வெளியிடுவோர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.