சச்சின் பைலட்டுடன் இனி மோதல் இல்லை.. அசோக் கெலாட் பேட்டி..

சச்சின் பைலட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணைந்து செயல்படுவோம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். பைலட்டுக்கு பின்னணியில் பாஜகவினர் செயல்பட்டு, தமது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அசோக் கெலாட் கூறி வந்தார். ஆனால், ஒரு மாதமாகியும் எதிர்பார்த்தது போல் ஆட்சி கவிழவில்லை. அதேசமயம், அசோக் கெலாட் தனக்கு ஆதரவான 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஒரு மாதமாக நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார். வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறாததால், சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் கடந்த 10ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அதன்பிறகு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியையும் சந்தித்துப் பேசினர். பின்னர், சச்சின் பைலட் கூறுகையில், எங்கள் கருத்துக்களை சோனியாகாந்தி கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தான் காங்கிரஸ் ஆட்சி வந்தது. எங்கள் குறைகளைத் தீர்க்க 3 பேர் கமிட்டி அமைப்பதாகச் சோனியா காந்தி கூறியிருக்கிறார் என்று கூறினார்.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் இன்று(ஆக.12) நிருபர்களிடம் கூறியதாவது:காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக ஒரு ஓட்டலில் நீண்ட நாட்களாகத் தங்கியிருப்பது கஷ்டமான விஷயம்தான். ஆனால், சில சமயங்களில் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாம் மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதை நான் அவர்களிடம் விளக்கியிருக்கிறேன். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரம் முழுவதையும் பார்த்தால் உண்மை நிலை மக்களுக்குப் புரியும். பிரிந்து சென்றவர்கள் இப்போது கட்சிக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களுடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மக்களுக்காக பணியாற்றுவோம்.

இவ்வாறு கெலாட் கூறினார்.

More News >>