சென்னைக்கு நிம்மதி.. ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றது!
6 ஆண்டுகளுக்கு முன்பு, கரூரில் உள்ள அம்மன் கெமிக்கல் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய முற்பட்டது. துறைமுக அதிகாரிகள் பொருட்களைச் சோதனை செய்ததில், மிகவும் ஆபத்தான `அம்மோனியம் நைட்ரேட்' இருப்பது தெரியவரவே, சரக்கு இறக்குமதிக்கான அனுமதியைக் கேட்டுள்ளனர். அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்ய முற்படவே, சுங்கத்துறை அதிகாரிகள் அதனைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இது கடந்த ஆறு ஆண்டுகளாக 37 கன்டெய்னர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. லெபனான் விபத்தை அடுத்து சென்னையிலும் அம்மோனியம் நைட்ரேட் இருப்பது சர்ச்சையானது. பாமக நிறுவனர் ராமதாஸ் உட்படச் சிலர் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் பெட்ரோலியம், எக்ஸ்ப்ளோசிவ் சேஃப்டி (PESO) அதிகாரிகளுடன் சேர்ந்து கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். ஆனால் கடைசியில் துறைமுக அதிகாரிகளோ வேதிப்பொருள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கூறினர். இதனால் தற்காலியமாக இந்தப் பிரச்சனை முடிவுற்றாலும் அம்மோனியம் நைட்ரேட் சென்னையில் எங்கு பாதுகாக்கப்படுகிறது என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதற்கிடையே, தான் தற்போது சென்னையிலிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டையும் ஐதராபாத்தில் உள்ள சால்வோ கெமிக்கல்ஸ் அண்ட் எக்ஸ்புளோசிவ் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து முதல்கட்டமாக 181 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் 10 கன்டெய்னர் லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 12 கன்டெய்னர்களில் 229 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலம் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.