பெங்களூரு கலவரம்: திட்டமிட்ட சதியா... அமைச்சர் அடுக்கும் காரணங்கள்!

கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நவீன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் புகாரை வாங்க மறுக்கவே இஸ்லாமியர்கள் சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் கலவரமாக மாற பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு வன்முறை வெடித்தது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசினர். கலவரம் குறித்துத் தகவலறிந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். எனினும், கலவரக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், இரண்டு பேர் பலியாகினர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் மேலும் பரவாமல் இருக்கப் பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பதிவு போட்ட எம்எல்ஏவின் மருமகன் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிடி ரவியோ, இந்த கலவரம் ஒரு திட்டமிட்ட சதி எனக் கூறி அதிரவைத்துள்ளார். ``பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்துள்ளனர். இது எப்படிச் சாத்தியமானது. 300 வாகனங்கள் மற்றும் எம்எல்ஏவின் வீட்டைச் சேதப்படுத்தியுள்ளனர். இதற்குப் பின்னால் எஸ்டிபிஐ இருக்கும் எனச் சந்திக்கிறேன். கலவரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் கர்நாடக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறியுள்ளார்.

அதே நேரம் ``நாங்கள் உங்களுடன் நிற்போம். யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம். தயவுசெய்து அமைதியாக இருக்குமாறு எங்கள் முஸ்லீம் உறவினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நானும் உங்களுடன் நிற்பேன்" என எம்.எல்.ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

More News >>