உங்கள் வலியை என்னால் உணர முடியும்! - சஞ்சய் தத்துக்கு யுவராஜ் சிங் ஆறுதல்
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. ஆனாலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மூச்சுத் திணறலுக்குத் தீவிர சிகிச்சை அளித்ததில் அவர் குணம் அடைந்து 2 நாட்களில் வீடு திரும்பினார்.
இதற்கிடையே தான் ஒரு டுவீட் பதிவிட்டார் சஞ்சய் தத். அதில் ``நண்பர்களுக்கு வணக்கம். மருத்துவ காரணங்களுக்காக சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் என்னுடன் இருக்கிறார்கள். எனது நல விரும்பிகள் யாரும் இதற்காகக் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாமல் எந்த குழப்பத்துக்கும் ஆளாக வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் மீண்டும் விரைவில் திரும்பு வருவேன்'' எனக் கூறியிருந்தார்.
சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உடனே செய்திகள் கசிந்தன. அதுவும் புற்றுநோய் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அதே நேரம் பாலிவுட் சினிமா ஊடகவியலாளர் கோமல் நந்தா இந்தச் செய்தியை உறுதிப்படுத்திருந்தார்.
இந்நிலையில் தான் சஞ்சய் தத்தின் டுவிட்டில் பதிலளித்துள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ``இப்போது மட்டுமல்ல, நீங்கள் எப்போதுமே ஒரு போராளி தான் சஞ்சய். நீங்கள் இப்போது அனுபவிக்கும் வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடியும். ஆனால் நீங்கள் எவ்வளவு பெரிய கடினமான சூழ்நிலையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். எனவே இந்த சூழ்நிலையையும் நீங்கள் எதிர்கொள்வீர்கள். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் உங்களுடன் இருக்கும். விரைவில் மீண்டு வாருங்கள்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.