நல்ல தலைமைக்காக ஏங்குகிறது அமெரிக்கா.. ஜோ பிடன், கமலா பிரச்சாரம்..

அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இணைந்து நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினர். டிரம்ப் நிர்வாகத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று 2 நாள் முன்பு ஜோ பிடன் அறிவித்தார்.

செனட்டரான கமலாவின் தாய், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். இந்தியத் தாய்க்கு பிறந்த கமலா ஹாரிஸ், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஜோ பிடனும், கமலாவும் இணைந்து நேற்று(ஆக.12) ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்கினர். அமெரிக்காவில் வில்மிங்டன் பள்ளியில் நடந்த முதல் பிரச்சாரக் கூட்டத்தில் இருவரும் பேசினர். ஜனநாயக் கட்சியில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப், அவரை கடுமையாக விமர்சித்தார். நாஸ்டி என்ற கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியதுடன், இடதுசாரி போராளி என்று வசைபாடினார்.

இதற்கு ஜோ பிடன் தனது பிரச்சாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், டிரம்ப்புக்கு பலமான, துணிச்சலான பெண்களைக் கண்டாலே பயம்தான். இந்தப் பெண்களைக் கண்டால் அவருக்கு பிரச்சனை ஏற்படாவிட்டால் தான் அது ஆச்சரியமான விஷயம். இப்போது டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவைப் பிளவுபடுத்தி வருகிறது. நிறவெறிக் கொள்கையால் மக்களைப் பிளவுபடுத்துகிறார் டிரம்ப். ஹிட்லர் காலத்து ஜெர்மனியை மக்கள் இப்போது அமெரிக்காவில் பார்க்கிறார்கள். ஜார்ஜ் பிளாயிட் கொலையை மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.கமலா ஹாரிஸ் பேசுகையில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் தவறி விட்டது. இந்த வைரஸ் பிரச்சனையால் அமெரிக்கா பொருளாதாரம் மோசமாகி விட்டது. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறவெறி மோதல்களாலும் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அமெரிக்காவுக்கு நல்ல தலைமை தேவை என்று மக்கள் ஏங்குகிறார்கள் என்றார்.

More News >>