விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை.. தமிழக அரசு அறிவிப்பு..
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்போது, கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது விழாக்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்க இயலாது.எனவே, மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பண்டிகைக்கான பொருட்களை வாங்கச் செல்வோர் முகக்கவசம் அணிந்து சென்று, சந்தைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.ஏற்கனவே அறிவித்தபடி சிறிய கோயில்கள் மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. அங்குச் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.