சென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..
சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். பூரண குணம் அடைந்தவர்கள், ரத்த பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு, அது கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று(ஆக.13) நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் போலீசார் உள்பட 40 காவல் துறையினர் பிளாஸ்மா தானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் பங்கேற்றனர்.பின்னர், மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், கொரோனாவில் இருந்து விடுபட்ட மேலும் சில காவல் துறையினரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.