பாஜகவின் ஆசை.. கனிமொழி vs உதயநிதி.. அழகிரியை வைத்து கடம்பூர் ராஜு சொன்னது என்ன?!

சமீபகாலமாக பாஜக - திமுக இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கந்த சஷ்டி விவகாரம், கு.க.செல்வம் விவகாரம் என மோதல் உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜக சென்ற வி.பி.துரைசாமி, ``இனி தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி. இனி திமுக - பாஜகவுக்குத்தான் போட்டியே" என்று கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு திமுக தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பை விட, அதிமுக தரப்பில் இருந்து தான் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. ``பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் சொன்னாரா? தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சொன்னாரா? நேற்றுவரை ஒரு கட்சியில் இருந்தவர் (வி.பி.துரைசாமி), அதற்கு முன் இன்னொரு கட்சியில் இருந்தவர் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக பாஜகவுக்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதெல்லாம் கருத்தா?. அப்படி கருத்துச் சொல்ல அவருக்கு அந்தக் கட்சி அதிகாரம் கொடுத்துள்ளதா?" என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அதிரடியாகப் பேசினார்.

அவருக்கு அடுத்தபடியாக அமைச்சர் கடம்பூர் ராஜு பாஜகவை மறைமுகமாக விளாசியிருக்கிறார். ``பாஜகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என்றால் அது 2-வது இடத்துக்கு யார் வருவது என்ற போட்டியே. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எங்களது கூட்டணியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அந்த வகையில் தற்போது பாஜக எங்களோடு இருக்கும் காரணத்தால் அவர்களுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்திருக்கும்.அதனால் அதிமுக தலைமையில் நாங்கள் தேர்தலைச் சந்தித்து எதிர்க்கட்சியாக வருவோம் என்று மறைமுகமாக வி.பி.துரைசாமி கூறியிருக்கிறார். அவர் திமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த காரணத்தினால் கருத்தை மறைமுகமாகக் கூறியிருக்கிறார். திமுகவிலிருந்து அனைவரும் வெளிவருவார்கள் என மு.க.அழகிரி நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார். அங்கு குடும்ப அரசியல் நடக்கிறது. அதனால் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது.

கருணாநிதி இருந்தபோதுகூட இந்த அளவுக்கு திமுகவில் குடும்ப ஆதிக்கம் கொடிகட்டிப் பிறக்கவில்லை. அப்போது, கருணாநிதி முதல்வர், மகன் துணை முதல்வர், பேரன் மத்திய அமைச்சர், மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என வரிசையாகப் பதவிகளைப் பட்டா போட்டனர். ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி உதயநிதியை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஸ்டாலினுக்குக் கனிமொழியைக் கண்டால் பயம். கனிமொழி ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.இதனால் தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதியை முன்னிலைப்படுத்துகிறார் ஸ்டாலின். இதை நாங்கள் சொன்னால் அரசியலாக இருக்கும். ஆனால் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரியே இந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். திமுக நிர்வாகிகளுக்கு இருக்கும் மனக்குமுறல்கள் எங்களை விட அழகிரிக்குத் தான் நன்றாகத் தெரியும். எனவே அவர் சொன்ன கருத்து நிச்சயமாகப் பிரதிபலிக்கும்" எனக் கடம்பூர் ராஜு கூறியிருக்கிறார்.

More News >>