கரிபூருக்கு ஒரு நீதி.. ராஜமலைக்கு ஒரு நீதியா?! ..சர்ச்சையில் `சகாவு பினராயி

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இது போதாத காலம் போல. தங்கக் கடத்தல் விவகாரத்தில் அவரின் தலையை உருட்டி வருகின்றனர். இதுபோதாதென்று, செய்தியாளர் குடைச்சல் வேறு. முன்பெல்லாம் செய்தியாளர் சந்திப்பில் மிக நிதானமாகப் பதிலளித்து வந்த பினராயி இப்போது, நடக்கும் சந்திப்பில் தங்கக் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், செய்தி நிறுவனங்கள் தான் தங்கக் கடத்தலை அரசுக்கு எதிராகத் திருப்புகிறது என்றும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் அவரின் சமீபத்திய செயல்பாடுகள் கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகின்றன.

இதற்கிடையே, பினராயின் நேற்றைய செயல்பாடு அம்மாநில மக்கள் மட்டுமின்றி, கேரள வாழ் தமிழர்கள் மத்தியிலும் கடுத்த விமர்சனத்தையும், வருத்தத்தையும் உண்டாக்கியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள ராஜமலை, பெட்டி முடியில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளப்பெருக்கால், 25 குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டன. அங்கு வசித்த 82 பேரில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள 71 பேரைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது வரை 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே, ராஜமலை கோர விபத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார் முதல்வர் பினராயி விஜயன். இங்கு நடந்தவை தான் தமிழர்கள் மத்தியிலும் பினராயி மீது அதிருப்தி உருவாகக் காரணமாக அமைந்துள்ளது. கோழிக்கோடு கரிபூர் விமான விபத்தும், ராஜமலை நிலச்சரிவும் நிகழ்ந்தது கிட்டத்தட்ட ஒரே நாளில் தான். ஆனால் கோழிக்கோடு விபத்தை மறுநாளே சென்று பார்வையிட்ட பினராயி விஜயன், ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களை வந்து பார்க்க 6 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.

ஆம்.. 6ம் தேதி நடந்த விபத்தை 13ம் தேதி வந்து பார்வையிட்டுள்ளார். இதுதான் தமிழர்களும் அதிருப்தி ஏற்பட முதல் புள்ளி. முதல்வரின் தாமத வருகைக்குக் காலநிலை தான் காரணம் என வரிந்துகட்டி வருகின்றனர் ஆளும் இடதுசாரி கட்சி பிரதிநிதிகள். காலநிலை மோசத்தின் காரணமாகத் தான் முதல்வர் ராஜமலை வர இவ்வளவு நாட்கள் ஆகிறது என எளிதாகக் கூறும் அவர்களால், இதே கால நிலையால் தான் 55 பேரின் உயிர் போயுள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர். அதேபோல் காலநிலை சரியில்லாத போது தான் எதிர்க்கட்சித் தலைவர்களான ரமேஷ் சென்னிதாலா, உம்மன் சாண்டி போன்றோர் ராஜமலைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துச் சென்றனர் என்பதையும் பேச மறுக்கின்றனர்.

அதுமட்டுமில்லை, நேற்றைய விசிட்டின் போது நடந்தவை சொல்ல முடியாதவை எனக் கூறுகின்றனர் மூணாறு வாசிகள். பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட ஆளுநர், படை பரிவாரங்கள் சகிதமாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பினராயி, பாதிக்கப்பட்டவர்களின் அருகில் சென்று கூட நலம் விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த மலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த பினராயி, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே உதவித்தொகை அறிவித்துள்ளார்.

நிலச்சரிவை பார்வையிட்ட பிறகு பேசிய பினராயி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டித் தரப்படும் என்றார். ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட் வைத்தார். சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிறுவனம் நிலம் ஒதுக்கித் தரும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதில் வீடு கட்டித் தரப்படும் என்றும், ஏதாவது தேவைப்பட்டால் அரசாங்கம் அதைக் குறிப்பாகப் பரிசீலிக்கும் என்றும் கூறியுள்ளார். விமான விபத்தைப் பார்வையிட ஓடோடி சென்றவர், தொழிலாளிகளுக்கு நேர்ந்த துயரத்தைப் பார்வையிட 6 நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளார் . ஏன் இந்த பாரபட்சம். இறந்த தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதாலா அல்லது அவர்கள் பணக்காரர்கள் இல்லாமல் தொழிலாளிகள் என்பதாலா.. சகாவு பினராயிக்கே வெளிச்சம்!

More News >>