நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..
சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் ட்விட் போட்டதற்காகப் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் சமூக ஆர்வலராகவும், பிரபல வழக்கறிஞராகவும் திகழ்பவர் பிரசாந்த் பூஷன். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷனின் மகனான இவர் பல்வேறு பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறார். ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்துள்ளார்.
சமீப காலமாக, மத்திய பாஜக அரசு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகவும், அதற்கு நீதிமன்றங்களே துணை போவதாகவும் இவர் கருத்து கூறி வந்தார். இவர் கடந்த ஜூன் 27ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தாத நிலையிலும் ஜனநாயகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதையும், அதில் நீதிமன்றங்களும் எப்படி பங்கு பெற்றன என்பதையும், குறிப்பாகக் கடைசியாகப் பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.அதே போல், ஜூலை 29ம் தேதி போட்ட ட்விட்டில், ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு மக்கள் நீதி பெற முடியாமல் தவிக்கும் நேரத்தில், பாஜக பிரமுகர் ஒருவரின் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக்கில் தலைமை நீதிபதி பாப்டே, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.
இந்த 2 பதிவுகளுக்காக பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து அவருக்குக் கடந்த ஜூலை 22ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அவமதிப்பு வழக்கில் பூஷனுக்காக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினார்.தவே வாதாடும் போது, பிரசாந்த் பூஷன் செய்தது எந்த விதத்திலும் நீதிமன்ற நிர்வாகத்தில் குறுக்கிடுவது ஆகாது. அவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதற்கு அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை இடம் அளிக்கிறது என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று(ஆக.14) தீர்ப்பு அளித்தது. அதில், பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. அவருக்கான தண்டனை குறித்து முடிவெடுக்க வரும் 20ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.