ஐஸ்கிரீமில் எலி விஷம்.. தங்கையே முதல் டார்கெட்.. அதிரவைத்த கேரள இளைஞர்!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின். 22 வயதான இவரின் பெற்றோர்கள் பென்னி மற்றும் பெஸ்சி. ஆல்பினுக்கு 16 வயதில் ஆன் மேரி என்ற தங்கை இருக்கிறார். சில தினங்களுக்கு முன் ஆல்பினின் தந்தை பென்னி மற்றும் தங்கை மேரி மருத்துவமனையில் மிகவும் உடல்நிலை குன்றிய நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆன் மேரி கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆல்பினின் தந்தை பென்னியின் உடல் நிலையோ மோசமான நிலையில் இருக்கிறது.
இருவரின் உடல்நலக்குறைவுக்கு `புட் பாய்சன்' காரணம் என முதலில் மருத்துவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் மேரியின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் அதனை தவறாக்கியது. மேரியின் உடலில் எலிக்கு வைக்கப்படும் விஷம் கலந்து இருந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் கூறப்பட்டது. சந்தேகமடைந்த மருத்துவர்கள், ஆல்பினினிடமும், அவரது தாயிடமும் கடைசியாக எல்லோரும் என்ன சாப்பிட்டனர் என்பதை விசாரித்துள்ளனர். அப்போது ஆல்பின் உருவாக்கிய ஐஸ்க்ரீமை இவர்கள் சாப்பிட்டார்கள். ஆனால் பென்னி, மேரியை தவிர ஆல்பினுக்கும், அவரது தாய்க்கும் ஐஸ்கீரிம் சாப்பிட்ட பிறகு எந்தவித உடல் பிரச்சனைகளும் ஏற்படவில்லை என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து மேரியின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்பதால் போலீஸுக்கு தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் ஐஸ்கீரிம் தயார் செய்த ஆல்பின், ஆன் மேரி இறுதிச்சடங்கின்போது எந்தவித வருத்தமும் இல்லாமலும், யாரிடமும் பேசாமலும் இருப்பதை அறிந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸின், விசாரணையில் உண்மைகளைக் கக்கியிருக்கிறார் ஆல்பின். இதுதொடர்பாக பேசியுள்ள கேரள காவல்துறை அதிகாரிகள், ``12ம் வகுப்பு வரை படித்திருக்கும் ஆல்பின், சிறிது நாள் பேக்கரியிலும்,பின்னர் கோட்டயத்தில் ஒரு ஹோட்டலிலும் வேலை பார்த்து வந்திருக்கிறார். சமீபத்தில், கொரோனா லாக் டவுன் காரணமாகச் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.
ஊரில் நிறைய நண்பர்கள் இருந்தும் வீட்டிலேயே முடங்கி இருந்த ஆல்பின், எந்நேரமும் மொபைலில் மூழ்கியிருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஆல்பினுக்கு இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை விரும்பிய ஆல்பின், அவரையே திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளார். ஆனால் இத்திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், அவர்களைக் கொலை செய்ய, தீர்மானித்துள்ளார். அதன்படி, தங்கை மேரியை முதலில் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். ஆல்பின் பார்ன் வெப்சைட்டை பார்த்ததை மேரி பார்த்துவிட்டதே இதற்குக் காரணம். எங்கே தன்னை பெற்றோரிடம் மாட்டிவிடுவாரோ எனப் பயந்து மேரியை முதலில் கொல்ல நினைத்து, அதற்காக கோழிக்கறியில் விஷம் வைத்துள்ளார். ஆனால் விஷத்தின் அளவு குறைவாக இருக்கக் கொலையில் இருந்து தப்பியுள்ளார் மேரி. இதன்பின் இன்டர்நெட்டில் எலி விஷம் கொடுத்து எப்படிக் கொல்வது என்பதைத் தேடிய ஆல்பின், தன் கையாலே ஐஸ்கிரீம் செய்து அதில் எலி விஷம் கலந்து பிரிட்ஜில் வைத்துள்ளார். ஆல்பினின் தாய்க்கு ஐஸ்கிரீம் அவ்வளவாகப் பிடிக்காததால் அவர் சாப்பிடவில்லை. அதேபோல் ஆல்பினும் சாப்பிடவில்லை. ஆனால் அவரின் தங்கையும், தந்தையும் ஐஸ்கிரீமை சாப்பிட்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதன்பின் மேரி இறந்துவிட எதுவும் தெரியாதது போல் யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறார் ஆல்பின். பின்னர் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றவர் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவர மாட்டிக்கொண்டார்." எனக் கூறியுள்ளனர். இக்கொலை சம்பவம் காசர்கோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.