கொரோனாவுக்கு 3 தடுப்பு மருந்துகள்.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தகவல்..

கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர், அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:நாம் பல்வேறு வித்தியாசமான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிறோம். இன்று இங்குக் குழந்தைகளைக் காண முடியவில்லை. கொரோனா அவர்களை இங்கு வரவிடாமல் தடுத்து விட்டது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நமது மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களைப் பாராட்டுகிறேன்.

இன்று, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள். ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள். இந்த நாளில் நாம் சுயச்சார்பு இந்தியாவை உருவாக்கச் சபதம் ஏற்க வேண்டும். 130 கோடி மக்களின் கனவான சுயச்சார்பு இந்தியா என்பது இப்போது உறுதிமொழியாக மாறியுள்ளது. மக்களின் மந்திரமாக மாறியுள்ளது. இது நிச்சயம் நிறைவேறும். நமது மக்களின் திறமை, பணியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சுயச்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் லட்சக்கணக்கான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அவற்றைச் சந்திக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது.கடந்த ஆண்டில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு(எப்டிஐ) 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் கொள்கைகள், ஜனநாயகம் மீது உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் காஷ்மீர் மாநிலத்தில் பெண்களுக்கும், தலித் மக்களுக்கும் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் புதிய வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. பெண்கள் எந்த துறையில் முன்னேறினாலும் நாம் வரவேற்கிறோம். பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிக்க கமிட்டி அமைத்துள்ளோம்.கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அவை இப்போது வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன. விஞ்ஞானிகள் கிரீன் சிக்னல் கொடுத்தவுடன், அந்த மருந்துகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும். இந்தியாவில் 1300 தீவுகள் உள்ளன. அவற்றுக்கான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த ஆயிரம் நாட்களில், லட்சத்தீவுகளுக்கு நீர்மூழ்கி கண்ணாடி இழை தகவல் தொழில்நுட்ப இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

More News >>