விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கும் பரபரப்பு.. மக்கள் இயக்கம் கட்சியாகிறது.. டெல்லியில் சீனியர் வக்கீலுடன் எஸ். ஏ. சி ரகசிய ஆலோசனை..

தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய கட்சிகளுக்கு மட்டுமே மவுசு. குறிப்பாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மக்களிடையே ஆதரவு உள்ளது. மற்ற எல்லா கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. சில சமயம் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடும் நிலை ஏறப்பட்டாலும் அது மக்களால் புறக்கணிக்கப்பட்டதாகவே இதுவரை வரலாறு கூறுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் உள்ளதாகக் கூறி ரஜினி காந்த் உள்ளிட்ட நடிகர்கள் குரல் கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் என்னால் எம்ஜிஆர் ஆட்சியைத் தர முடியும் என்று கூறி புதிய கட்சி தொடங்கி 2021ம் ஆண்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் எனது கட்சி போட்டியிடும் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அதற்கேற்ப கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தைச் சோதித்துப்பார்த்தார். அடுத்து அரசியலுக்கு வரும் நடிகர் இவர்தான் என விஜய் பெயர் தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்திருக்கிறார். இவர் ஏதாவது ஒரு அரசியல் கருத்துச் சொன்னால் அதற்குப் பதிலடியாக அரசியல் ரெய்டுகள் அணிவகுத்து வருகின்றன. மாஸ்டர் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. நெய்வேலி சூட்டிங்கில் இருந்த விஜய்யை இரவோடு இரவாக காரில் அழைத்த வந்த அதிகாரிகள் அவரை வீட்டில் வைத்து விசாரித்தனர். கடையில் ரெய்டில் எதுவும் சிக்கவில்லை என்று கைவிரித்தனர். தன் மீது நடத்தப்பட்ட ரெய்டு ஞாபகமாக வாத்தி ரெய்டு கம்மிங்.. என்ற பாடல் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றது. இப்படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தும் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடியிருப்பதால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில் விஜய் புதிய கட்சி தொடங்க உள்ளதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.சமீபத்தில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் டெல்லி சென்று அங்குள்ள பிரபல வழக்கறிஞருடன் கட்சி பதிவு செய்வது பற்றி ரகசியமாக ஆலோனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த சந்திப்பின் போது விஜய் உடன் செல்லவில்லை. இது விஜய்க்காகத் தொடங்கப்படும் கட்சியா அல்லது எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கும் கட்சியா. அல்லது ஏற்கனவே விஜய் அமைத்திருக்கும் விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறுகிறதா என்பது பற்றித் தெரியவில்லை. விஜய் நேரடியாகக் கட்சி தொடங்கினால் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் எஸ் ஏ சந்திரசேகர் இக்கட்சியைத் தொடங்கி பின்னர் விஜய்யிடம் ஒப்படைப்பாரா என்பதெல்லாம் இனி விவாதமாக மாறிவிடும் ஆனால் ஏதோவொரு அரசியல் நகர்வு விஜய் தரப்பு முன்னெடுத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

More News >>