12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரம் தாண்டியது..
சென்னையில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைத் தாண்டியது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.16) 5950 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 32 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 38,055 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 6019 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 78,270 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 125 பேரையும் சேர்த்தால் 5766 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 54,019 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இது வரை தமிழகத்தில் 35 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 68,444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை. சென்னையில் நேற்று 1196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 16,650 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 436 பேருக்கும், திருவள்ளூர் 488, காஞ்சிபுரம் 307, மதுரை 120 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 20,911 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 19,870 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,876 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதே சமயம், சென்னையில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தேனி, வேலூர், கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இது வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.