கோவை மாவட்ட திமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்,.

திமுகவில் நிர்வாக ரீதியாகக் கோவை மாவட்டம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இடையே அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, ஆளும் அதிமுகவிலும், அடுத்து ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் உள்ள திமுகவிலும் உட்கட்சிப் பூசல்களைத் தடுப்பதற்கு நிர்வாக ரீதியாக மாவட்டங்கள், ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு பதவிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுகவில் கோவை மாவட்டம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் விவரம் வருமாறு:மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி கோவை வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளை உள்ளடக்கி கோவை தெற்கு, சூலூர், கிணத்துக்கடவு தொகுதிகளை உள்ளடக்கி கோவை கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கி. கோவை மாநகர் கிழக்கு மாவட்டமும், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தொகுதிகளை உள்ளடக்கி, கோவை மாநகர் மேற்கு மாவட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராகத் தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக எஸ்.சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நா.கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராகப் பையா என்ற கிருஷ்ணன் ஆகியோரை நியமித்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

More News >>