எஸ்.பி.பி பாடிய பாட்டே அவருக்கு மருந்து.. ஸ்பீக்கரில் ஒலிபரப்பும் மருத்துவமனை..
பெரும்பாலானோர் மனக்கவலை ஏற்பட்டால் அமைதியான மெலடி பாடல்கள் அல்லது பக்தி பாடல்கள் கேட்பார்கள் மனதை அமைதிப்படுத்துவார்கள். அதில் நிறைய எஸ்.பி.பி பாடிய பாடல்கள் இருக்கும். தற்போது அவர் பாடிய பாடல்கள் அவருக்கு மருந்தாகி இருக்கிறது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சென்ற 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டதுடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது.
பின்னர் அவரது மகன் எஸ்பிபி. சரண், அப்பாவின் உடல்நிலை அச்சப்படும் அளவுக்கு இல்லை. அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவித்ததுடன் தினமும் தந்தையின் உடல்நிலை பற்றி விவரம் தெரிவித்து வருகிறார். தற்போது எஸ்பிபி உடல்நிலை தேறி வருவதாகக் கூறினார்.சென்னை தனியார் மருத்துவமனையில் 6வது மாடியில் சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்பிபி. அவருக்கு அவர் பாடிய பாடல்களே ஸ்பீக்கர் மூலம் போட்டு அவர் கேட்கும்படி செய்திருக்கிறார்கள். அவர் அப்பாடல்களை கேட்கும்போது அதன்மூலம் உடல் நிலை வேகமாக சீரடையும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.