நீதிபதிகள் முதல் பத்திரிகையாளர்கள் வரை.. தேசிய பாதுகாப்பில் கை வைக்கிறாரா ஜெகன்மோகன்?!
ஆந்திராவில் பலம் பொருந்திய சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறியவர் ஜெகன்மோகன் ரெட்டி. பதவியேற்ற சில மாதங்களிலேயே, பொதுமக்களுக்கான திட்டங்கள், 3 துணை முதல்வர்கள் எனப் பல அதிரடிகளை நிகழ்த்தினார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். இதனால் அவருக்கு ஒருபுறம் புகழும், கூடவே மறுபுறம் சர்ச்சையும் ஓட்டிக்கொண்டே வருகிறது. நம்மூரில் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தபின் கிடப்பில் போடும். அதேபோன்று தான் இப்போது ஜெகனும் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்திரபாபு கொண்டு தலைநகர் அமராவதி திட்டம், கோதாவரி ஆறு இணைப்பு திட்டம் ஆகியவற்றைக் கிடப்பில் போட்டு உள்ளார் ஜெகன்.
இதுபோன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது ஜெகனின் அரசு மற்றுமொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அது போன் டேப் எனப்படும் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு. இந்த சர்ச்சைக்கு வித்திட்டவர், ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்தவரும், சமீப காலமாக ஜெகனுடன் மோதலில் ஈடுபட்டு வரும் எம்.பி. கே.ரகு ராம கிருஷ்ணா ராஜு தான். இவர் நேற்று, தனது இரண்டு மொபைல் போன்களும் சட்டவிரோதமாக மாநில புலனாய்வு அதிகாரிகளால் ஒட்டுக்கேட்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். இவரின் குற்றச்சாட்டை அடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஜெகன் ஆட்சிக்கு வந்தது முதலே இந்த போன்கள் ஒட்டுக்கேட்பு நடந்து வருவதாகவும், நீதிபதிகள் முதல் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வரை மாநிலத்தின் முக்கிய பிரமுகர்களின் தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டு வருவதாக ஆந்திர ஊடகங்கள் ஜெகனுக்கு எதிராக எழுதி வருகின்றன. இதனை மையமாக வைத்து சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். ``ஒய்.எஸ்.ஆர். கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மாநிலத்தில் ஜனநாயக நிறுவனங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைப்பேசி உரையாடல்கள் எந்தவொரு சட்ட முறையையும் பின்பற்றாமல் மாநில அரசு டேப் செய்து வருகிறது.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நிகழ்வுகளின் போது மட்டுமே தொலைப்பேசிகளை டேப் செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் ஜெகனின் அரசாங்கம் அதன் சொந்த அரசியல் லாபங்களுக்காகச் சட்டவிரோதமாக போன் டேப்பில் ஈடுபடுகிறது. அரசாங்கத்தின் தவறான செயல்பாட்டிற்கு எதிராக குரல் எழுப்பும் எந்தவொரு நபரையும் தாக்குவதை ஜெகன் அரசாங்கம் வழக்கமாகச் செய்து வருகிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தவிர, தற்போது நீதித்துறைக்கும் குறிவைத்துள்ளது ஜெகன் அரசாங்கம். இது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்" எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.