எதிர்க்கட்சித் தலைவர்களின் போனை டேப் செய்வதா? சந்திரபாபு நாயுடு கொதிப்பு.. பிரதமருக்கு புகார் கடிதம்..

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் போன்களை ஒட்டுக் கேட்பதாக ஜெகன்மோகன் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியுற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டது. இதன்படி, அமராவதியில் மிகப் பிரம்மாண்டமாகச் சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.ஜெகன் அரசு பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்தது. அமராவதி திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிதாக 3 தலைநகர்களை அமைக்கச் சட்டம் இயற்றியது. மேலும், தெலுங்கு தேச முக்கியப் பிரமுகர்கள் பலர் மீது ஊழல் மற்றும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அரசை எதிர்த்து சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தார். ஜனாதிபதியிடமும் அக்கட்சியினர் புகார்களைக் கொடுத்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்களை போலீசார் டேப் செய்வதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர் ஜெகன் அரசு மீது புகார் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் அவர், ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்டு சட்டவிரோதமாக டேப் செய்கின்றனர். அதிலும் ஆளும்கட்சியைச் சேர்ந்த தனியார் நபர்கள் கூட நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டேப் செய்கிறார்கள்.

இந்திய டெலிகிராபி சட்டம்1885, தகவல் தொழில்நுட்பச் சட்டம்2000 ஆகியவற்றின் கீழ், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்களின் போன்களை மட்டுமே ஒட்டுக் கேட்கலாம். ஆனால், இப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு காட்டுத் தர்பார் நடத்துகிறது. எல்லோரையும் அச்சுறுத்தும் வகையில் எதேச்சதிகாரமாகச் செயல்படுகிறது. எனவே, மத்திய அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

More News >>