தல, தளபதி ரசிகர்களுக்கு இந்த வருடம் தீபாவளி உண்டா, இல்லையா? மாஸ்டர், வலிமை ரிலீஸ் எப்போது..
தளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் முடிவடைந்தும் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அஜீத் நடிக்கும் வலிமை பட படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மாஸ்டர் படத்தைத் தீபாவளிக்கு வெளியிட எண்ணி உள்ளனர். அஜீத் நடிக்கும் வலிமை படமும் தீபாவளி ரிலீஸை திட்டமிட்டே தொடங்கப்பட்டது. எச்.வினோத் இதனை இயக்குகிறார்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. டி வி படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதால் அதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஆனாலும் முழுவீச்சில் தொடங்கவில்லை. சினிமா படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இன்னும் தெரியவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கத் தலைவர் பாரதிராஜாவும், சுதந்திர நாளில் படப்பிடிப்பு தொடங்குவது பற்றி அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால் முதல்வர் அதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதேபோல் தியேட்டர் திறப்பும் இப்போதைக்கு இருக்காது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் தீபாவளிக்குத் திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் அஜீத்தின் வலிமை படப்பிடிப்பு இன்னும் 50 சதவீதம் வெளி நாடுகளில் நடத்த வேண்டி இருப்பதால் அதன் படப்பிடிப்பைத் தள்ளி வைக்குமாறு அஜீத் கூறியிருக்கிறாராம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு படப் பிடிப்பு தொடங்கினால் போதும், படத்தையும் அடுத்த வருடத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் போதும் என்று கூறிவிட்டாராம்.இதனால் விஜய், அஜீத் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு அவர்களின் தலைவர்கள் படம் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்காது என்றே தெரிகிறது.