நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்...கொரொனா கால நண்பன் நெல்லிக்கனி..!
பழக்கடைக்குச் சென்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை என்று வகைவகையான பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பழக்கடையை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து சென்றால் நடைபாதை கடையில் நெல்லிக்காய் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஆம், பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட பெரிய பழக்கடைகளில் நெல்லிக்காயைப் பார்க்கக்கூட இயலாது. அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியாததே காரணம்.வேறு எந்தக் கனியிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் சி சத்தை கொண்டுள்ளது பெருநெல்லி. பெருநெல்லி காயகல்ப மூலிகைகளில் ஒன்றாகும். இக்கனியை முறைப்படி உண்டால் வயது முதிர்ந்தவர்களும் இளமை அழகுடன் திகழ்வர் என்று கூறப்படுகிறது. இதைப்பற்றி தேரையர் என்னும் சித்தர் பின்வரும் பாடலை எழுதியுள்ளார்.
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிளமாப்பிளைபோ லேயழகு வாய்க்குமே - சேப்புவருங்கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்காயாமலக முண்ணமுறை யால்
பெருநெல்லியை எந்த வயதினரும் சாப்பிடலாம். நெல்லிக்கனியைச் சாப்பிட்டவுடன் ஒரு புளிப்புச் சுவை கிடைக்கும். அதற்குக் காரணம் அஸ்கார்பிக் அமிலம். இந்த அமிலம், அதற்கு வைட்டமின் 'சி' சத்தினை அளித்து நோய் எதிர்ப்பு ஆற்றலுக்குக் காரணமாகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றலின் வகைகள்
இரத்தக் கொதிப்பு வராமல் தடுப்பது ஒரு வகை நோய் தடுப்பாற்றல். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது இன்னொரு வகை தடுப்பாற்றல். வெளியிலிருந்து கிருமிகள் நம்மை வந்து உடலைத் தாக்காமல் தடுப்பது வேறு வகை நோய் எதிர்ப்பு ஆற்றல். இந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் Cell-mediated immunity என்று அழைக்கப்படுகிறது.
பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் செல்லும்போது, கூட்டமான இடங்களில் இருக்கும்போது அருகில் நோய்த்தொற்று கொண்டவர் இருக்கக்கூடும். அவரது தும்மல், இருமல் போன்றவை மூலமாகப் பரவும் நோய்கள் நம்மில் தொற்றிக்கொள்ளாமல் காக்கும் காவல்காரனாக இருப்பது நெல்லிக்கனி.
பெருநெல்லியில் இருக்கும் சத்துகள்
ஒரு கிண்ணம் (150 கிராம்) அளவுள்ள பெருநெல்லியில் 66 கலோரி ஆற்றல், 1 கிராம் புரதம், 1 கிராம் அளவுக்குக் குறைவான கொழுப்பு, 15 கிராம் கார்போஹைடிரேடு, 7 கிராம் நார்ச்சத்து, தினசரி தேவையான அளவில் 46% வைட்டமின் சி, 9% வைட்டமின் பி5, 7% வைட்டமின் பி6, 12% செம்பு, 9% மாங்கனீசு, 6% பொட்டாசியம் (சதவீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்து ஒரு நாளைக்குத் தேவையான அளவில் கிடைக்கும் பங்கு) ஆகியவை அடங்கியுள்ளன.
கட்டுப்படுத்தப்படும் சர்க்கரை அளவு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது பல்வேறு உடல்நல குறைபாடுகளுக்குக் காரணமாகிறது. நீரிழிவு (வகை 2) என்ற குறைபாடு, இருதய நோய், பக்கவாதம், நினைவு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் உருவாகத் துணைபோகிறது.
பெருநெல்லி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை எடுத்துக்கொள்ள ஆகும் நேரத்தை இது குறைக்கிறது. ஆகவே, வேகமாக இரத்தத்தில் சர்க்கரை சேருவது தடுக்கப்படுகிறது. சிறுகுடலிலிருந்து இரத்தத்திற்குச் சர்க்கரை சேருவதையும் இது தடுக்கிறது. நெல்லிக்காயில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், கார்போஹைடிரேடு இரத்தத்தில் கிரகிக்கப்படும் செயல்பாட்டின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
எப்படிச் சாப்பிடலாம்?
உடலுக்கு நலம் பயக்கக்கூடிய உணவுகளாக இருந்தாலும் அவற்றை நாம் சாப்பிடுவதற்கான ஏற்ற முறைகள் உள்ளன. சரியான விதத்தில் சாப்பிடாவிட்டால் அவற்றிலுள்ள நன்மைகள் நமக்கு உரிய விதத்தில் கிடைக்காமல் போகலாம். பெருநெல்லியை நன்றாகக் கழுவிவிட்டு நேரடியாகச் சாப்பிட்டு விட்டு விதையைப் போட்டுவிடலாம். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
நெல்லி தேன் ஊறல்
குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெருநெல்லியை சிறிதாக நறுக்கி, ஒன்றிரண்டு சொட்டு தேன் சேர்த்துக் கொடுக்கலாம். நுரையீரல் சார்ந்த தொற்று உள்ள குழந்தைகளுக்கு நெல்லி தேன் ஊறலை வாரத்துக்கு இரண்டு முறையாவது கொடுக்கலாம். தேன் இயற்கை இனிப்பு கொண்டது; அது ஆரோக்கியமானது.
நெல்லிக்காய் கலவை சாதம்
தேங்காய் சோறு, மாங்காய் சோறு. எலுமிச்சை சோறு, புளியோதரை போன்று கலவை சாதமாக நெல்லி சோறு செய்து சாப்பிடலாம். காரட் துருவது போன்று நெல்லிக்காயைத் துருவி, சோற்றை வேக வைத்தபிறகு அதனுடன் சேர்த்துப் புரட்டினால் நெல்லிக்காய் கலவை சோறு கிடைக்கும். வேண்டிய காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் இந்த சோற்றைச் சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகினால் சிறிது இனிப்பு சுவை கிடைக்கும்.
கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் நெல்லிக்காய் சாறு (ஜூஸ்)
கொரோனாவிலிருந்து பாதுகாப்பு
கோவிட்-19 கிருமியால் ஏற்படும் கொரோனா பாதிப்புக்கு எதிராகத் துத்தநாகம் (Zinc), புரதம் (Protein) இவற்றுடன் வைட்டமின் சி மற்றும் டி ஆகிய சத்துகள் பாதுகாப்பு அளிக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. இவற்றைத் துணை உணவுகள் மற்றும் மாத்திரை வடிவிலாக பல்வேறு நாடுகளில் அளிக்கின்றனர். தினசரி இரண்டு பெருநெல்லியிலிருந்து ஜூஸ் எடுத்து அருந்துவது கொரோனா பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
நெல்லிக்காயைக் கழுவி, மேல் தோலைச் சீவி விட்டு, விதையை நீக்கி, அதைச் சாறு எடுத்து அப்படியே குடிக்கலாம். குழந்தைகளுக்குச் சுவை வேண்டுமானால் சில சொட்டுகள் தேன் சேர்க்கலாம். ஐஸ் துண்டுகளோ மணமூட்டிகளோ சேர்க்கக்கூடாது.
நெல்லி முள்ளி
பெருநெல்லியை நறுக்கி வெயிலில் காய வைத்து நெல்லி முள்ளி தயாரிக்கப்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நெல்லி முள்ளியை வாயில் அதக்கிக் கொண்டால் செரிமானம் அதிகமாகும். பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து, காலையில் நீராகாரமாக அருந்தலாம். அப்போது நெல்லி முள்ளியையும் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
எப்படி சாப்பிடக்கூடாது?
நெல்லிக்காய் அப்படியே சாப்பிடக்கூடியது. ஆனாலும் வேறுபட்ட வழிமுறைகளில் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று மேலே பார்த்தோம். இன்னும் சில முறைகளிலும் அது கடைகளில் சந்தைகளில் கிடைக்கிறது. அவற்றுள் பல தயாரிப்புகள் பலன் தராதவை.
இனிப்பு சேர்த்த நெல்லி ஊறல்
நெல்லி ஊறல் சந்தைகளிலும் கிடைக்கிறது. நெல்லியை வேக வைத்து, பின்னர் சர்க்கரை பாகில் ஊற விட்டு குலோப்ஜாமூன் போல கொடுக்கப்படுகிறது. சர்க்கரை சேர்ப்பதால் அது உடலுக்குக் கேடு. ஆகவே, மேலே கூறிய விதத்தில் நாமே தேன் சேர்த்து புதிதாகச் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
நெல்லிக்காய் ஊறுகாய்
பலர் நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டால் நெல்லிக்காயின் பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஊறுகாய் செய்யும்போது எண்ணெய் மற்றும் மசாலா பொருள்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் வயிற்றுக்கும் உடலுக்கும் ஏற்படும் எதிர்மறை பலன்களே அதிகம். நெல்லிக்காயின் பலன் பத்து சதவீதம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆகவே, நெல்லிக்காயை ஊறுகாய் செய்து சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
நெல்லிக்காயைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் கிடைக்கும். சயவனபிராச லேகியம் என்ற நெல்லிக்காய் லேகியத்தையும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி சாப்பிட்டு பலன் பெறலாம்.