மணிப்பூரில் கலகலக்கும் காங்கிரஸ் கட்சி.. பாஜகவுக்கு தாவும் 7 எம்.எல்.ஏ.க்கள்..

மணிப்பூரில் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வருடன் டெல்லிக்கு வந்து பாஜகவில் சேருகின்றனர். அவர்களில் 6 பேர் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், பாஜக பல எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது. அப்போது, தவ்னாஜம் சியாம்குமார் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்து 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதன்பின், அம்மாநில அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கடைசியாக, கடந்த 10ம் தேதியன்று பாஜக முதல்வர் பைரன்சிங், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் அவரது அரசுக்கு ஆதரவாக 28 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 16 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். ஆதரவாக வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மறுநாளே சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்.இந்நிலையில், ராஜினாமா செய்த ஓக்ராம்ஹென்றி சிங், ஒய்னாம் லுகோய்சிங், முகமது அப்துல் நசீர், நகாம்தங்ஹாகிப், ஜின்சுவாங்ஷு, பானோம் புரோஜன் ஆகியோரும், ஆர்.கே.இமோ என்ற இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முதல்வர் பைரன்சிங்குடன் தனி விமானத்தில் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் பாஜகவில் சேரவிருக்கின்றனர்.

இது குறித்து பைரன்சிங் கூறுகையில், இந்த 7 பேரும் பாஜகவில் சேர விரும்புகிறார்கள். இவர்களைக் கட்சியின் தேசிய தலைவர் நட்டாவிடம் அழைத்துச் செல்லவிருக்கிறேன். மணிப்பூரில் எந்த பிரச்சனையும் இல்லை. எதிர்க்கட்சிகள் குறை சொல்லலாம். ஆனால், ஜனநாயக ரீதியான எண்ணங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று தெரிவித்தார். மணிப்பூரில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸ் கட்சி தற்போது கலகலத்துப் போயிருக்கிறது.

More News >>