சுதந்திர தினத்தன்று ஓய்வு முடிவு ஏன்?! - ரெய்னா வெளிக்கொணர்ந்த உண்மை

இந்திய அணியின் மகத்தான வீரர் மகேந்திர சிங் தோனி. கடந்த உலகக் கோப்பை தொடரில் சரியாகச் செயல்படாததால் அணியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ஓய்வு முடிவை அறிவிக்காமலும், அணியில் இடம் பெறுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் பிசிசிஐக்கு கூடுதல் அழுத்தம் என வந்தது. அதே நேரம் இளம் வீரர்களும், மூத்த வீரர்களும் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்தார். இவரைத் தொடர்ந்து ரெய்னாவும் தனது ஓய்வை திடீரென அறிவித்தார். தோனியின் ஓய்வு கூட எதிர்பார்த்த ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால் ரெய்னாவின் முடிவு எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

இரண்டு பேருமே தற்போது சென்னையில் தான் உள்ளனர். இருவரும் சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவித்தது ஏன், அதுவும் சென்னை வந்து ஓய்வு அறிவித்தது ஏன் என்பது குறித்த பல்வேறு விஷயங்கள் சந்தேகமாக இருந்தன. இதற்கு விடையளித்துப் பேசியிருக்கிறார். தனியார் ஊடகத்துக்கு பேசிய ரெய்னா, ``தோனி சென்னை அடைந்தவுடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பார் என்று எனக்குத் தெரியும், எனவே நான் தயாராக இருந்தேன். 14ம் தேதி நாங்கள் ஒன்றாக சென்னை வந்தோம். ஆகஸ்ட் 15ல் ஓய்வு பெற நாங்கள் ஏற்கனவே மனதை தயார்ப்படுத்தி வைத்திருந்தோம்.

தோனியின் ஜெர்சி எண் 7 மற்றும் என்னுடைய ஜெர்சி எண் 3. அதை ஒன்றாக இணைத்தால் 73 ஆகிறது. ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்தது, எனவே இதைவிடச் சிறந்த நாள் இருந்திருக்க முடியாது என்று அன்றைய நாளே அறிவிக்க முடிவெடுத்தோம். தோனி தனது வாழ்க்கையை 23 டிசம்பர் 2004 அன்று சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிராகத் தொடங்கினார், அதே நேரத்தில் 2005 ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக 2005 இல் நான் அறிமுகமானேன். நாங்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றாகத் தொடங்கினோம். அதேபோல் ஐ.பி.எல்லில் சி.எஸ்.கே அணியில் தொடர்ந்தோம். எனவே நாங்கள் இப்போதும் ஒன்றாக ஓய்வு பெற்றோம்.

எங்கள் ஓய்வை அறிவித்த பிறகு, நாங்கள் நிறைய கட்டிப்பிடித்து அழுதோம். நான், பியூஷ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் கரண் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து, எங்கள் தொழில் மற்றும் எங்கள் உறவு பற்றி பேசினோம்" எனக் கூறும் ரெய்னா, தனது ஓய்வை ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்த போதிலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியே பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் கொடுத்தார். ஆனால் தோனியோ பிசிசிஐக்கு அறிவித்த பின்பே இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

More News >>