`கிரிக்கெட்டர் டூ விவசாயத் தோழன்! -ஓய்வுக்கு பிறகான தோனியின் வாழ்க்கை
சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தாலும், ஐபிஎல் போட்டிகளில் களம் காண இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் குறிப்பாகச் சென்னை ரசிகர்கள் மத்தியில் சற்று நிம்மதி அடையும் விஷயமாக இருக்கிறது. தோனி ஓய்வு முடிவை அறிவித்தவுடன் பல்வேறு விஷயங்கள் அவரை குறித்துப் பேசப்பட்டது. அதில் குறிப்பானது, ஓய்வுக்குப் பிறகு தோனி என்ன செய்யப்போகிறார் என்பது தான். பிரபல அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமி கூட, தோனி அரசியலுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனால், எங்கும், எதிலும், எப்போதும் வித்தியாசம் காட்டும் தோனி, ஓய்வுக்கு பிறகான வாழ்க்கையிலும், மற்ற பிரபலங்களைப் போல் இல்லாமல் வித்தியாசம் காட்ட இருக்கிறார்.
தனது சொந்த ஊரான ராஞ்சியில் மிகப்பெரிய பண்ணை வீட்டில் வசித்து வரும் தோனி, அங்கு தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தற்போது இதைச் சார்ந்த தொழிலையே முழுநேரமாகச் செய்ய இருக்கிறார் என்கிறார் அவரது நண்பர் ஒருவர். இது தொடர்பாக தோனியின் நண்பரும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மிஹிர் திவாகர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், ``இனி தோனி மிகப்பெரிய விஷயங்களைச் செய்யக் காத்திருக்கிறார். தோனிக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இருக்கிறது. தனது பண்ணை வீட்டில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதேபோல் இயற்கை உரங்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தோனி சோதனை செய்திருக்கிறார்
நியூ குளோபல் நிறுவனம் தயாரித்த உரத்தைத் தான் தனது பண்ணை வீட்டில் பயன்படுத்தினார். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போக, நியூ குளோபல் நிறுவனத்தின் பெருமளவிலான பங்கை தோனி வாங்க முடிவு செய்துள்ளார்.இதற்காக நியூ குளோபல் நிறுவனத்திடம் பேசிவிட்டார். ஐபிஎல் முடிந்ததும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இயற்கை உரங்கள் தொடர்பான வணிகத்தை அவர் செய்வார்" எனக் கூறியுள்ளார்.