ஐஎம்டிபி ரேட்டிங்கில் விஷ்ணு படம் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியது..
வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணு விஷால் அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் அவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது. அதே போல் முண்டாசு பட்டி, இன்று நேற்று நாளை படங்களும் வரவேற்பு பெற்றது. ஆனாலும் அதிரடி வெற்றிக்காகக் காத்திருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கிய ராட்சசன் த்ரில்லர் படத்தில் நடித்தார் விஷ்ணு விஷால். அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்துப் பல படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வந்தாலும் ராட்சசன் வெற்றியை இன்னமும் படக் குழு ருசி பார்த்துக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் கேரளாவில் டிவி சேனல் ஒன்றில் இப்படத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டபோது அதற்கான பாராட்டு டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.
அதற்குக் கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஷ்ணு விஷால். இனி நான் நடிக்கும் படங்களைக் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் தேர்வு செய்து நடிப்பேன் என்றார். தற்போது ராட்சசன் பற்றி மற்றொரு இனிப்பான செய்தியை அப்பட இயக்குனர் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இந்திய அளவில் ராட்சசன் படம் 3வது இடத்தையும், தமிழ் சினிமாவில் முதல் இடத்தையும் பிடித்திருப்பதாக ஐஎம்டிபி ரேட்டிங் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.