பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏ நீதிமன்றத்தில் சாட்சியம்...
கடந்த 3 வருடங்களுக்கு முன் 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று இரவில் பிரபல மலையாள நடிகை (இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்) தனது சொந்த ஊரான திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கொச்சி அருகே வேனில் வந்த ஒரு கும்பல் அவரை காரிலிருந்து இறக்கி வேனில் ஏற்றி கொடூரமாகப் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் மலையாள சினிமா உலகில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவரான பல்சர் சுனில் என்பவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்குப் பிரபல மலையாள நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திலீப்பையும் கைது செய்தனர்.
பிரபல நடிகை பலாத்கார வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டது மலையாள திரை உலகத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 85 நாள் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை முதலில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையைத் தொடர்ந்து ஒரு பெண் நீதிபதியின் தலைமையில் இந்த வழக்கு கொச்சியிலுள்ள ஒரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திலீப் முதலில் ஆலுவா நீதிமன்றத்திலும், பின்னர் கேரள உயர் நீதிமன்றத்திலும், கடைசியில் உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்ததால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்திடம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட நடிகையின் தோழிகளான நடிகைகள் மஞ்சுவாரியர், ரம்யா நம்பீசன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் சாட்சியம் அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட நடிகையும் நீதிமன்றத்தில் ஆஜராகி நடந்த சம்பவம் குறித்து நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். இவை அனைத்துமே மூடப்பட்ட நீதிமன்றத்தில் தான் நடந்தது. பாதிக்கப்பட்ட நடிகை, குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிபதி மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான பி.டி. தாமஸ் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட நடிகையைப் பலாத்காரம் செய்த கும்பல் கொச்சியில் உள்ள பிரபல நடிகரும், இயக்குனருமான லாலின் வீட்டுக்கு அருகே கொண்டுவிட்டனர். இதையடுத்து நடிகை லாலின் வீட்டிற்கு அவரிடம் சென்று நடந்த விவரத்தைக் கூறினார். உடனடியாக அவர் அந்த பகுதி அமைந்துள்ள திருக்காக்கரை தொகுதி எம்எல்ஏவான பி.டி. தாமஸை வீட்டுக்கு வரவழைத்தார். அவரிடமும் பாதிக்கப்பட்ட நடிகை நடந்த சம்பவம் குறித்துக் கூறினார். இதனால் தான் இன்று பி.டி. தாமஸ் எம்எல்ஏவிடம் விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த அன்று நடிகை தன்னிடம் கூறிய விவரங்களை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.