வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.. மோசமாகும் ஹெச்.வசந்தகுமார் உடல்நிலை?!
கொரோனா தொற்றால் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்த பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திரை பிரபலங்களான கருணாஸ், எஸ்.பி பாலசுப்பிரமணியன் எனப் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் கருணாஸ் குணமடைந்து விட, எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு உயிர் காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதேபோல் அரசியல்வாதிகளும் கொரோனாவுக்கு தப்பவில்லை. தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமாருக்குக் கடந்த 11 தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவரால் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் அவர்களது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அவரின் உடல்நிலை மோசமாகி வந்ததை அடுத்து தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.எனினும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் வசந்தகுமாரின் குடும்பம், அவரது ஆதரவாளர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.