`ஸ்விக்கி எங்களைக் கண்டு கொள்ளவில்லை! -உயிரைப் பணயம் வைத்து ஏங்கும் டெலிவரி பாய்கள்

தற்போது இருக்கும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் உணவு தேவையை பெரும்பாலும் போக்குவது ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்களின் டெலிவரி பாய்கள், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, கொரோனா அச்சத்தையும் ஒதுக்கி வைத்து சேவைகளைச் செய்து வருகின்றனர். ஆனால் தங்கள் டெலிவரி பாய்களை ஸ்விக்கி நிறுவனம் கண்டுகொள்ளவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதனால் டெலிவரி பாய்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றோடு மூன்றாவது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் வேலைக்குச் செல்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனாவை காரணம் காட்டி, ஸ்விக்கி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வந்த 20க்கும் மேற்பட்ட சலுகைகளைத் திரும்பப் பெற முடிவு செய்ததே பிரச்சனைக்குக் காரணம். இதை எதிர்த்தே ஊழியர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குறுக்கு வழியில் ஈர்க்கும் முயற்சியாக ஆர்டர்களை எடுப்பவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகையை ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதையும் சிறிதும் சட்டைசெய்யாமல் போராடி வருகின்றனர் ஊழியர்கள்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் பேசுகையில், ``கொரோனா லாக் டவுனை காரணம் காட்டி வாராந்திர, மாதாந்திர சலுகைகள் உட்பட 20 சலுகைகளை ஸ்விக்கி நிறுவனம் குறைப்பதாக அறிவித்தது. இதேபோல் தினசரி ஆர்டர் இலக்கையை அதிகரித்துவிட்டது. இதனை எதிர்த்து மூன்றாவது நாளாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டம் எதற்காக என்பதைக்கூட ஸ்விக்கி கண்டுகொள்ளவில்லை. ஸ்விக்கி மேனேஜர் கூட எங்களுடன் பேச முன்வரவில்லை. நாங்கள் டூட்டிக்கு வராவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவோம் என்று எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். மேலும் இன்சூரன்ஸ் தொகையைக்கூடக் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். தற்போது ஆர்டர்களை எடுப்பவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. இது எங்களைத் தற்காலிகமாக ஈர்க்க முயற்சிக்கும் செயல் மட்டுமே.

இதற்கு முன்பு நடந்த போராட்டத்திலும், இதேபோல தற்காலிக ஊக்கத்தொகை கொடுத்தனர். நாங்களும் நம்பி வேலைக்கு திரும்பினோம். ஆனால் சில நாட்களில் அந்த சலுகைகளை ரத்து செய்துவிட்டார்கள். அதனால், இந்த முறை நாங்கள் போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்று திட்டமிட்டுள்ளோம். கடந்த முறையைப் போல் இல்லாமல் சென்னையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் தற்போது ஒன்றுபட்டுள்ளனர்" எனக் கூறினார்.

More News >>