எஸ்.பி.பி தொடர்ந்து கவலைக்கிடம்!- சரண் அறிவித்த நிலையில் மருத்துவமனை மீண்டும் அறிக்கை

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் இரண்டு தினங்களுக்கு முன் அறிக்கை வெளியானது.

அதில், ``5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திடீரென நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி, அவர் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்து வருவதால், உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலையைக் கண்காணிக்கச் சிறப்பு மருத்துவக்குழு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி விரைவில் குணம் அடைந்து வரவேண்டும் என்று இளையராஜா, ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன். ரஜினிகாந்த், குஷ்பு, அனிருத் என திரையுலகினர் பலரும் விருப்பம் தெரிவித்தும், பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருந்தனர். திரைப் பிரபலங்களைப் போன்றே, முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி போன்ற அரசியல்வாதிகளும் எஸ்.பி.பி பூரண நலத்துடன் திரும்பி வர வேண்டும் எனப் பதிவிட்டிருந்தனர்.

இதற்கிடையே, எஸ்.பி.பியின் உடல்நிலை சீராகி வருவதாக அவரின் மகன் சரண் தெரிவித்தார். ``“கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை எஸ். பி. பி. உடல்நிலை சீராக உள்ளது. எனது தந்தை எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறி இருந்தார். இவர் அறிக்கை வெளியிட்ட சில மணிநேரங்களில் தற்போது எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ``எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று அறிவித்துள்ளது.

More News >>