மனிதவள மேம்பாட்டு துறை கல்வி அமைச்சகமாக மாற்றம்.. ஜனாதிபதி உத்தரவு வெளியானது..
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய கல்வி அமைச்சகமாகப் பெயர் மாற்றும் செய்வதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை இறுதியில், பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சக பெயர் மாற்றம் குறித்த மத்திய அமைச்சரவையின் முடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதை ஏற்று அதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அனைத்து அலுவல்களிலும் புதிய பெயர் அமல்படுத்தப்படும். இனிமேல் மத்திய கல்வி அமைச்சகம் என்ற பெயரில்தான் அந்த துறை இயங்கும்.