சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா?
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவசம்போர்டின் கோவில்கள் மட்டும் இல்லாமல் வேறு பல கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இக்கோயிலில் மாதந்தோறும் நடை திறந்து 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இக் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலை நம்பித்தான் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் சபரிமலை மட்டுமல்லாமல் வேறு 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன. சபரிமலை கோவில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத் தான் இந்த அனைத்து கோவில்களும் நிர்வகிக்கப்படுகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒரு வருடத்திற்குப் பக்தர்கள் மூலம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் மறைமுகமாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் கேரள அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மூலம் தான் சபரிமலைக்குப் பெருமளவு வருமானம் வருகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாகச் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் வராததால் தேவசம் போர்டுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டலக் காலம் முதல் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இன்னும் ஒருசில தினங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மண்டல காலம் முதல் பக்தர்களை அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வருமான இழப்பைச் சரிக்கட்ட மண்டலக் காலம் முதல் பக்தர்களுக்குக் கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு ஒரு மாதம் முன் ஐப்பசி மாதத்திலேயே பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே மண்டலக் காலம் முதல் தரிசனத்திற்கு அளிப்பது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஐப்பசி மாத பூஜைகளுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் சபரிமலையில் வைத்தே பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உடனுக்குடன் முடிவு தெரியும் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்று தெரிந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.