புதுச்சேரியில் முழு ஊரடங்கு.. சாலைகள் வெறிச்சோடின..

புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அதற்கு பிறகு மாநில அரசுகளே அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப பல கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை குழு கூடி ஆலோசித்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அரசு அறிவித்தது. மேலும், அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஆக.18) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, செய்தித்தாள் ஆகியவை விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரியின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

More News >>