ரேடியோவை எப்படி ஆஃப் செய்யலாம்? தம்பியை போட்டுத் தள்ளிய அண்ணன் கைது
எப்எம் ரேடியோவில் சத்தமாகப் பாட்டு வைத்துக் கேட்டுக் கொண்டிருந்ததைத் தட்டிக் கேட்ட தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த அப்துல் அசீஸ் என்பவரின் மகன்கள் ஹிலால் (30), ஷமீர் (27). ஹிலால் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஷமீருக்கு குறிப்பாக வேலை எதுவும் கிடையாது. தினமும் இரவில் வீட்டுக்கு வரும் ஹிலால் சத்தமாக எப்எம் ரேடியோவில் பாட்டுக் கேட்பது வழக்கம்.
இது ஷமீருக்கு பிடிக்காது. சத்தத்தைக் குறைத்து வைக்குமாறு பலமுறை ஹிலாலிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. நேற்று இரவும் வழக்கம்போல ஹிலால் சத்தமாகப் பாட்டு வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். இதில் கோபமடைந்த ஷமீர், ரேடியோவை ஆப் செய்துவிட்டுத் தூங்கச் சென்றார். இது ஹிலாலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டிலிருந்த ஒரு கம்பியை எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஷமீரின் தலையில் பலமாக அடித்தார். சத்தத்தைக் கேட்டு அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது ஷமீர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஷமீர் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நெடுமங்காடு போலீசார் ஹிலாலை கைது செய்தனர்.