பள்ளி ஆசிரியரான நடிகர் மோகன்லால்

கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரள கல்வித்துறை சார்பில் 'விக்டர்ஸ்' என்ற பெயரில் ஒரு கல்வி சேனல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சேனலுக்கு ஒரு இணையதளமும் உள்ளது. டிவி சேனல் மூலமும், இணையதளம் மூலமும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் தினமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆன்லைன் வகுப்புகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல ஏழை, எளிய மாணவர்களுக்கு செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என முதலில் புகார் எழுந்தது. ஆனால் பல சமூக தொண்டு நிறுவனங்கள் ஏழை மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டிவிக்களை இலவசமாக வழங்கி வருவதன் மூலம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக சினிமா நட்சத்திரங்களும் இடையிடையே வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் மோகன்லால் நேற்று 10ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். 10ம் வகுப்பில் ஆங்கில பாடம் நடத்திய இவர், தனது சினிமா அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நடிகர் மோகன்லால் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நடிகர்கள் இதேபோல வகுப்புகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

More News >>