குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தேனி அருகே உள்ள குரங்கணி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக காணப்படும். இந்நிலையில், இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், காட்டுப் பகுதிக்குள் இருந்த பலர் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக, சென்னையை சேர்ந்த புதுமணத் தம்பதி உள்பட மொத்தம் 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் மொத்தம் 39 பேர் இதில் சிக்கிக் கொண்டனர்.
தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், 27 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், தீக்கு இரையாகி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள், பயத்தில் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது: குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com