அதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் சேர்ந்தது ஏன்?

அதிமுக முன்னாள் எம்.பி. லட்சுமணன், இன்று திமுகவில் சேர்ந்தார் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலும் தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சிப்பூசல்களை சரிசெய்யும் பணியிலும், கூட்டணிக்காக ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.திமுக, அதிமுகவில் கட்சிப் பதவி கிடைக்காதவர்களும், எம்.எல்.ஏ. சீட் கிடைக்காது என்ற சந்தேகத்தில் உள்ளவர்களும் தற்போது கட்சி மாறத் தொடங்கியுள்ளனர்.

திமுகவில் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க.செல்வம், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஜெ.அன்பழகன் இறந்ததும் அந்தப் பதவி இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசுவுக்கு வழங்கப்பட்டது. இதனால், எம்.எல்.ஏ. சீட்டும் தனக்குக் கிடைக்காது என்பதை உணர்ந்த கு.க.செல்வம், பாஜகவுக்குத் தாவினார். அதிமுகவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டாக்டர் டி.எஸ்.விஜய், புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர் மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்தப் பதவி தற்போதைய அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளரான எஸ்.ஆர்.கே.அப்புவுக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் திமுகவில் சேர்ந்தார்.இதன் தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.குப்புசாமி, வானூர் தொகுதி செயலாளர் வி.எம்.ஆர்.சிவா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் இராம.சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.மணவாளன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.என்.முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் எம்.என்.ஏழுமலை, கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் என்.ஆர்.மணி, வழக்கறிஞர் இராம்.இரமேஷ், மாவட்ட பிரதிநிதி மைலம் எஸ்.வெங்கடேசன், காணை ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பொன்.குமார், வானூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.கே.குமார் (எ) லட்சுமணசாமி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

ஜெயலலிதா இருந்த போது, விழுப்புரம் மாவட்டச் செயலாளராக லட்சுமணன் இருந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினார். இதனால், அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. இரு அணிகளும் இணைந்த பிறகு, லட்சுமணனுக்கு விழுப்புரத்தைப் பிரித்து நகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் ஓ.பி.எஸ் கேட்டு வந்தார். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிக்க சி.வி.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், லட்சுமணனுக்குப் பதவி கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான், அவர் திமுகவுக்குத் தாவியுள்ளார். திமுகவில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் தரப்படும் என்று கூறப்படுகிறது.

More News >>