பொன்மாலை பொழுது வேண்டாம்.. பொன் காலை பொழுது வா, பாலு.. பாரதிராஜா கண்ணீர் வீடியோ..
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து ஆபத்தான கட்டத்தைக் கடந்து மீண்டு வரவேண்டும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், இளையராஜா, வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் விருப்பம் தெரிவித்து வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இருவரின் நட்பை பகிர்ந்துகொண்டு கதறி அழுத படி உருக்காகப் பேசி இருக்கிறார்.
அவர் அதில் கூறியதாவது: பாலு, டேய் பாலு வாடா.. எழுந்து வாடா. வாடா என்ற உரிமையை நீ எனக்கும் வாடா என்ற உரிமையை நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டு காலமாகிறது. பள்ளி நாட்களிலே கூட நான் இந்தளவுக்கு யாருடனும் பழகியதில்லை. இது ஒரு பொன்மாலை பொழுது.. இன்றளவும் உலகமே கேட்டு வியந்து போகும் பாடல். வைரமுத்து அங்கு தான் உதிக்கிறான். பொன் மாலை பொழுது நீ பாடலாம்.. ஆனால் உனக்குப் பொன்மாலை பொழுது வரக்கூடாது.. பொன் காலை பொழுது தான் வரவேண்டும். பாலு.. நான் மட்டும் இல்லடா.. உலகத்தில் உள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விடுகிறோம்.
இரண்டு நாட்களாக நான் விடும் கண்ணீர்.. அது என் கன்னங்களில் வழியும் போது அதைத் துடைத்துத் துடைத்து எறிந்து கொண்டிருக்கிறேன். இப்போது கூட இந்த பதிவில் அது வந்துவிடக் கூடாது என நான் நிதானமாகப் பேசுகிறேன். பாலு வந்துரு வாடா.. நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய். எங்களுடன் பழகுகிறாய்.. இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில்.. வந்துருடா பாலு..பாரதிராஜா இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது பல சமயங்களில் அவர் நா தழுதழுத்தது. பேச்சை முடிக்கும்போது துக்கத்தைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.