மூணாறு நிலச்சரிவு இன்று மேலும் 3 உடல்கள் மீட்பு
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ஆம் தேதி இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 82 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இரவு 11 மணியளவில் நடந்த இந்த கோரச் சம்பவம் மறுநாள் காலை 7 மணிக்குப் பின்னர் தான் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. இதற்குப் பின்னர் பல மணி நேரம் கழித்து மட்டுமே மீட்பு படைகளால் அங்குச் செல்ல முடிந்தது. கடந்த 12 தினங்களாக இங்கு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீஸ், தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் சேர்ந்து தினமும் உடல்களைத் தேடி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் வரை 59 உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நிலச்சரிவு நடந்த இடத்தில் மட்டுமல்லாமல் அந்த இடத்திற்கு அருகே ஓடும் ஆறு மற்றும் ஆற்றின் கரையிலும் சுமார் 3 கிமீ சுற்றளவில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அஸ்வின் ராஜ் என்ற 6 வயது சிறுவனின் உடலும், இந்த சிறுவனின் தாத்தாவான ஆனந்த செல்வத்தின் உடலும் மீட்கப்பட்டன.
இதையடுத்து இதுவரை இந்த நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் கணக்கின்படி 9 பேரின் உடல்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளது. உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசி உடல் கிடைக்கும் வரை தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறும் என்று அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்தனர். இந்த நிலச்சரிவில் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.