ஒரே ஒரு ரீ டுவிட்.. பல நாள் காத்திருப்பு.. மேகாலயா ஆளுநருக்கு நேர்ந்த கதி!

வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ததகதா ராய். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மேகாலயாவில் பணிபுரிந்தாலும், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். இதற்கிடையே, இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ததகதா ராயை ஆளுநர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக்கை அவருக்குப் பதிலாக மேகலாயா ஆளுநராக மாற்றம் செய்துள்ளார். இவரின் மாற்றத்துக்கு ஜனாதிபதி மாளிகை தரப்பில் எந்தவித காரணமும் கூறப்படவில்லை.

பொதுவாக ஒரு ஆளுநர் 5 ஆண்டுகள் பதவி வகித்துவிட்டால், அவர் மாற்றப்படுவார். ஆனால் இவரின் மாற்றத்துக்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் 75 வயதுக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது என்று அக்கட்சியில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சில அமைச்சர்கள் 75 வயது முடிந்தவுடன் தங்கள் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் பாஜகவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றிய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரே வயதைக் காரணம் காட்டிதான் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே காரணத்தைக் காட்டிதான் தற்போது ராயும் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம், கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலையடுத்து, மேகாலயாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் காஷ்மீரிலிருந்து வரும் பொருட்களை மேகாலயாவில் தடை செய்ய வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த கருத்தை ஆதரித்து ததகதா ராய் அதை ரீ ட்விட் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் மேலும் சில சர்ச்சைகளில் கடந்த வருடங்களில் தவறாமல் சிக்கி வந்தார் ராய். இதனால் இவரது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற நிலையில் தற்போது பறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

More News >>